Saturday, October 11, 2008













சென்ற வருடம் 2007 ஆம் ஆண்டு நான் இந்தியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் கொலு வைக்க இயலவில்லை. இந்த வருடம் என்னுடைய 4 வயது மகன் மற்றும் 2 வயது மகளுடன் மிகச் சிறப்பாக நவராத்திரி விழாவைக் கொண்டாடினோம்.வழக்கம் போல் முதல் படியில் விநாயாகர் மற்றும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி பொம்மைகளை வைத்தோம்.2 வது படியில் அசோகவனத்தில் சிறிய் வைக்கப் பட்டிருந்த ஸீதையை ஹனுமார் சந்தித்து தைரியம் கூறும் காட்சி.3 வது படியில் திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவி பால் கொடுத்ததை அறியாத அவரது தந்தை அவரை கண்டிக்கும் காட்சி ( சீர்காழி ஸ்தல வரலாறு)இந்தப் படியிலேயே சென்ற முறை செய்த தசாவதார பொம்மைகளையும் வைத்துவிட்டோம். 2 மற்றும் 3 வது படிகளில் உள்ள பொம்மைகள் அனைத்துமே கையால் செய்யப்பட்டவைதான்.4 வது படியிலும் சென்ற முறை வைத்த கஜேந்திர மோட்சம் காட்சியையே வைத்துவிட்டோம். 5 வதாக கொஞ்சம் பெரிய அளவில் கிடைத்த ஒரு பார்பி பொம்மையை இவ்வருடம் துர்கையாக அலங்கரித்தோம். அதற்கு ஏற்ற அளவில் ஒரு சிங்கம் பொம்மையையும் தேடி பிடித்து வாங்கி வைத்தோம்.இதற்கெல்லாம் என் கணவரும் குழந்தைகளும் மிகவும் ஒத்துழைத்தார்கள்.
நமது கலையும் கலாச்சாரமும் நமது பண்டிகைகளில்தான் வெளிப் படுகின்றன. அவற்றில் நவராத்திரி மிகவும் முக்கியமான பண்டிகையாகும். எங்களைப் போல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு நமது பாரம்பரியத்தையும் பழக்க வழக்கங்களையும் கடை பிடிப்பது கொஞ்சம் கடினமான செயல்தான். கொலு வைப்பதற்கு பொம்மைகள் வேண்டுமானால் ஒன்று இந்தியாவிலிருந்து வாங்கி வர வேண்டும். அல்லது இங்கேயே உள்ள சில கோவில்கள் அல்லது இந்திய கடைகளில்தான் வாங்க வேண்டும். அதுவும் எல்லா கோவில்கள் மற்றும் இந்தியக் கடைகளிலும் கிடைத்துவிடாது. இதனால்தான் நாங்கள் எங்களுக்கு விருப்பமான பொம்மைகளை நாங்களே செய்து கொள்வது எனத் .தீர்மானித்தோம்
சிறிது பொறுமையுடனும் ஆர்வத்துடனும் நவராத்திரியைக் கொண்டாடினால், அதன் மூலம் கிடைக்கும் பலனோ மிகவும் பெரிது.
இப்போது நாங்கள் நவராத்திரியை விமர்சையாகக் கொண்டாடுவதால், என் 4 வயது மகனுக்கும் 2 வயது மகளுக்கும் சிறு வயது முதலே நமது பண்பாட்டின் மீது பற்று ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், நவராத்திரி பண்டிகையின் வரலாறு என்ன? அதை ஏன் கொண்டாடுகிறோம்? என்பது முதல் , கொலுவில் வைக்கப் பட்டுள்ள பல்வேறு theme களுக்கான கதைகளும் இருவருக்கும் அத்துப் படியாகிவிட்டது. இதன் மூலம் நமக்கும் நமது புராணக் கதைகளை இவர்களுக்கு விளக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் நவராத்திரி சமயத்தில் பல விதமான ஸ்லோகங்கள் சொல்வது பூஜைகள் செய்வது மற்றும் பக்திப் பாடல்களைப் பாடுவது என்றெல்லாம் செய்வதால் குழந்தைகளுக்கும் இவற்றிலெல்லாம் ஒரு பரிச்சயம் ஏற்படுகிறது. இது தவிர பலரையும் அழைத்து தாம்பூலம் கொடுப்பதால் அனைவரிடமும் நல்ல முறையில் பழகும் வாய்ப்பையும் விருந்தினரை உபசரிக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறார்கள்
இத்தகைய நல்வாய்ப்பை அளித்த நவராத்திரி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் தவறாமல் கொண்டாடுவதற்கு அந்த அம்பிகையின் அருளை வேண்டுகிறேன்.

1 comment:

Unknown said...

Thanks for sharing, it was really nice. Whenever you get time, please do logon to http://eelam.mywebdunia.com
and
http://femina.mywebdunia.com